துபாய் : அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவக்கப்பட்டது. இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.