விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை திறப்பு தாமதமாகி வருவதற்கு, இதை திறக்க அழைக் கப்பட உள்ள வி.ஐ.பி.,க் கள், சரியான தேதி கொடுக் காததே காரணம் என கூறப்படுகிறது. இப்பாதை இம்மாத இறுதியில் திறப்பதும் சந்தேகமே.
விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணி முடிந்து, கடந்த மாதம் 18ம் தேதி ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், 120 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடத்தினார்.பாதுகாப்பு சான்று வழங்கி 20 நாட்கள் ஆகியும், இன்னும் இப்பாதை திறக்கப்படவில்லை.இப்பாதை திறப்பு விழாவை வரும் 15ம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடத்தவும், மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வரும் வந்து பாதையை திறந்து வைக்கவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் மூலம் கடந்த மாதம் அழைப்பு விடுக்கப் பட்டும், இன்னும் பதில் கிடைக்காததால், பாதை திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில், வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வரை அனைத்து ரயில்களிலும் இரண்டாம் வகுப்பு (படுக்கை வசதி), 'ஏசி' மூன்றாம் வகுப்பு மற்றும் 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.சில ரயில்களில், குறிப் பிட்ட சில தினங்களில் மட்டும் முதல் வகுப்பு 'ஏசி' டிக்கெட்டுகள் மிகக் குறைந்தளவே முன்பதிவு செய்யப்படாமல் உள்ளது.மயிலாடுதுறை - விழுப்புரம் பாதை விரைவாக திறக்கப்பட்டால், இப்பாதையில் முன்பு (மீட்டர் கேஜ் பாதையில்) இயக்கப்பட்ட ரயில்களுடன், முக்கிய நகரங்கள் இடையே சிறப்பு ரயில்களும் கூடுதலாக இயக்க வாய்ப்பு உள்ளது.இதனால், தென்மாவட்ட ரயில்களில் பயணிகள் நெருக்கடி ஓரளவுக்காவது குறைய வாய்ப்புள்ளது.
விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை திறப்புக்கு அரசியல் காரணம் சொல்லி தள்ளி வைக் க்ஷகப்படும் நிலை தவிர்க்கப் பட, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வரும் இனியும் தாமதிக்காமல் ரயில் பாதை திறப்பு விழாவுக்கு தேதி கொடுக்க வேண்டுமென, தென் மாவட்டங்களுக்கு அடிக்கடி பயணிக்கும் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இப்பாதை திறப்பு தாமதம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் நேற்று கேட்ட போது, ''டில்லியிலிருந்து தற்போது வரை எந்த தகவலும் வரவில்லை. தெற்கு ரயில்வே பொது மேலாளர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில்வே சாதனைகள் தொடர்பான அபூர்வ தபால் தலை கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, இப்பாதை திறப்பு குறித்து பத்திரிகை நிருபர்களிடம் தெரிவிக்கவும் வாய்ப் புள்ளது,'' என்றும் தெரிவித்தார்.