அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எலந்தங்குடி இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, November 13, 2009

அதிசயம்

வஞ்சிரமீனின் நினைவாற்றல்

 

  இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்வது பறவைகளுக்கு மாத்திரம் உள்ள தனித்தன்மை என்று நீங்கள் கருதியிருந்தால், அது தவறாகும். உண்மையில் தரையில் மாத்திரம் அல்லாது கடலில் வாழும் உயிரினங்களும் இடம் விட்டு இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த அத்தியாயத்தில் இடம்விட்டு இடம் பெயரும் மீனினமான வஞ்சிர மீனின் துணிகரச் செயல் பற்றி ஆய்வு செய்வோம்.

வஞ்சிரமீனும் மற்ற மீனினங்களைப் போன்று ஆறுகளில் பெண்மீன்கள் இடும் முட்டையிலிருந்தே தோன்றுகின்றன. தோன்றிய நாளிலிருந்து சில வாரங்கள் மட்டுமே ஆறுகளில் வாழும் இந்த மீனினம், சில வாரங்களுக்குப்பின் ஆறு சென்று கலக்கும் கடலை நோக்கி தனது பயணத்தைத் துவக்குகிறது. கடலை நோக்கிச் செல்லும் இந்த பயணத்தின் போது வஞ்சிர மீன்கள் ஏராளமான ஆபத்தை எதிர்கொள்கின்றன. மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளையும், நீர்த்தேக்கங்களையும், மாசுபட்ட தண்ணீரையும், வஞ்சிர மீன்களை உணவாக உட்கொள்ளக்கூடிய பெரிய பெரிய மீன்களால் ஏற்படும் அபாயங்களையும் கடந்து வஞ்சிர மீன்கள் கடலை சென்று அடைகின்றன. பல ஆபத்துகளை கடந்து கடலை அடைந்த வஞ்சிர மீன்கள், கடலிலேயே பல ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. வஞ்சிர மீன்கள் தங்களது சந்ததியை பெருக்கக்கூடிய பருவத்தை அடைந்தவுடன், கடலிலிருந்து அவைகள் முதலில் புறப்பட்டு வந்த ஆற்றை நோக்கி மீண்டும் நீந்தத் துவங்குகின்றன.

இதில் வியக்கத்தக்க செய்தி என்னவெனில் வஞ்சிர மீன்கள் தாங்கள் பிறந்து சில வாரங்களே வாழ்ந்த இடத்தை தவறாமல் சென்றடைவதுதான். இந்த செயலில் அவைகள் சிறிதும் தவறிழைப்பதில்லை. அவைகள் பயணித்த தூரம் ஒன்றும் குறைந்தது அல்ல. வஞ்சிர மீன்கள் தாங்கள் புறப்பட்டு வந்த இடத்தை சென்றடைய வேண்டுமெனில், சிலவேளைகளில் 1500 கிலோ மீட்டர் (930 மைல்கள்) தூரத்தைக் கடக்க வேண்டும். 1500 கிலோ மீட்டர் தூரத்தையும் கடந்து செல்ல சில மாதங்கள் கூட ஆகலாம். இந்த பயணத்தில் வஞ்சிரமீன்கள் பல தடைகளை கடந்து செல்ல வேண்டியதாக இருப்பினும் அவைகள் சிறிதும் தவறிழைக்காமல் தாங்கள் புறப்பட்டு வந்த இடத்தைச் சென்றடைகின்றன.

இந்த மீன்கள் சந்திக்கக்கூடிய முதல் மற்றும் முக்கியமான பிரச்னை என்னவெனில் பல ஆறுகள் ஒரே இடத்தில் கலக்கும் இடமாக கடல் இருப்பதால் வஞ்சிர மீன்கள் கடந்து வந்த ஆறு, கடலில் சென்று கலக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்தாக வேண்டும். இதன் அடிப்படையில்தான் தாங்கள் திரும்பிச் செல்ல வேண்டிய பாதையை வஞ்சிரமீன்கள் தீர்மானிக்க வேண்டும். எந்த ஒரு வஞ்சிரமீனும் இந்த செயலில் ஒருபோதும் தவறிழைப்பதில்லை. முதன் முறையாக அவைகள் தாங்கள் புறப்பட்டு வந்த இடத்திற்கு திரும்ப வேண்டும் என்று தீர்மானித்த உடனேயே, தாங்கள் நீந்தி வந்த ஆற்றை நாமெல்லாம் ஆச்சரியப்படும் வகையில் அடையாளம் கண்டுகொள்கின்றன.

அவைகள் திரும்பி செல்ல வேண்டிய ஆற்றில் புகும் வஞ்சிர மீன்கள், ஆற்றின் எதிர் நீரோட்டத்தில் மிக வேகமாக நீந்த ஆரம்பிக்கின்றன. வஞ்சிர மீன்கள் முதலில் ஆற்றிலிருந்து கடலுக்கு இடம்பெயரும்போது, ஆறுகளின் நீரோட்டப்பாதையிலேயே நீந்தி வருவதால், அவைகள் மிக எளிதாக கடலை சென்றடைந்திருக்கும். ஆனால் அவைகள் கடலிலிருந்து ஆற்றை நோக்கி நீந்த ஆரம்பிக்கும் போது, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையில் நீந்த வேண்டியதிருக்கும். இவ்வாறு அவைகள் எதிர்த்திசையில் நீந்திச் செல்லும்போது சில இடங்களில் உயரமான அருவிகளைக் கூட தாண்டிச் செல்கின்றன. (பார்க்க படம்). இந்த பயணத்தில் வஞ்சிரமீன்கள் இன்னும் ஏராளமான ஆபத்துக்களை கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. ஆறுகளில் ஆழமில்லாத பகுதிகளில் மீன்களை உணவாக உட்கொள்ளும் பறவைகளும், கரடிகளும் மற்ற விலங்கினங்களும் நிறைந்திருப்பதால், அவைகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வஞ்சிர மீன்கள் இதுபோன்ற ஆழமில்லாத இடங்களை கடந்து செல்லும்போது, தனது மேல் துடுப்பு தண்ணீருக்கு மேலே, வெளியில் தெரியும்படி நீந்திச் செல்கிறது.

வஞ்சிரமீன்கள் எதிர்கொள்ளும் கடினமான பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை. ஏனெனில் அவைகள் நீந்திச் செல்லும் ஆறுகள் பல கிளைகளாக பிரியும் இடங்களில், தான் பிறந்து வளர்ந்த இடம் உள்ள கிளையை நினைவில் கொண்டு, அதனை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். இந்தத் தேர்ந்தெடுப்பில் எந்த ஒரு வஞ்சிரமீனும் ஒருபோதும் தவறிழைப்பதில்லை. அவைகள் தாங்கள் சென்றடைய வேண்டிய ஓடையை சரியாக சென்றடைகின்றன.

இப்போது நாம் நம்மையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் பிறந்து சில காலம் மாத்திரமே இருந்துவிட்டு, நம்முடைய கிராமத்தை விட்டு 1500 கிலோ மீட்டர் தூரமுள்ள மற்றொரு நகரத்திற்குச் சென்று விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். பல வருடங்கள் கடந்து நாம் நம்முடைய பிறந்த கிராமத்திற்கு செல்ல எண்ணுகிறோம். பல வருடங்களுக்கு முன்னால் நீங்கள் கடந்து வந்த தெருக்களையும், ஊரையும் உங்களால் நினைவில் கொள்ள முடியும் என்று எண்ணுகிறீர்களா? கண்டிப்பாக முடியாது. ஆறறிவு படைத்து மனிதர்களால் முடியாத ஒரு செயலை, ஐந்தறிவு கொண்ட மீனினம் சிறிதும் தவறின்றி செய்வது முற்றிலும் வியக்கத்தக்க செயல் அல்லவா?

இந்த வகை மீனினங்கள் தாங்கள் பிறந்து சிறிது காலம் வாழ்ந்த இடங்களை எப்படி அடையாளம் கண்டு கொள்கின்றன என்பது பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வகை மீனினம் தாங்கள் பிறந்து சிறிது காலமே வாழ்ந்த இடங்களை, தங்களுக்குள்ள 'அதீத மோப்ப சக்தியால்' கண்டு கொள்கின்றன என ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு வேட்டைநாயையும் எஞ்சும் வகையில் வஞ்சிரமீன்கள் ஓடும் தண்ணீரில் கூட (வேட்டை நாய்களுக்கு ஓடும் தண்ணீரில் மோப்பம் பிடிக்கும் சக்தி கிடையாது) மோப்பம் பிடிக்கக்கூடிய வகையில் எல்லாம் வல்ல அல்லாஹ் மீன்களுக்கு அளித்திருக்கும் கூர்மையான மூக்கிற்கு அவைகள் நன்றி செலுத்த வேண்டும். ஓடும் தண்ணீரின் ஒவ்வொன்றும் வித்தியாசமான வாசனையைக் கொண்டிருக்கும். ஆற்றிலிருந்து கடலுக்குச் செல்லும் வேளையில் சிறிய வஞ்சிர மீன்கள் இந்த வித்தியாசமான வாசனைகள் அனைத்தையும் தனது நினைவில் பதிவு செய்து கொள்கிறது. ஓடும் தண்ணீரின் வித்தியாசமான வாசனைகள் அனைத்தையும் கடலிலிருந்து ஆற்றுக்குள் செல்லும் வேளையில் மீண்டும் நினைவு கூர்ந்து தனது பிறந்த இடம் திரும்பி வருகிறது இந்த வஞ்சிர மீன்கள்.

வழக்கத்திற்கு மாற்றமான இந்த செயல் எப்படி நடைபெறுகிறது? ஒவ்வொரு வஞ்சிர மீனும் தான் பிறந்து சிறிது காலமே வாழ்ந்த இடத்தை சரியாக எப்படி கண்டுபிடிக்கிறது? தனது உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல், உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகளையும், தனது எதிரிகளான மற்ற விலங்கினங்களையும் எதிர்த்து, வஞ்சிர மீன் தான் பிறந்து சிறிது காலமே வாழ்ந்த இடத்தை சென்றடைய வேண்டிய காரணமென்ன? வஞ்சிர மீன்கள் இவை எவற்றையும் தனது சொந்த நலனுக்காக செய்யவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் தங்களது முட்டைகளை தாங்கள் பிறந்து சிறிது காலம் வாழ்ந்த தண்ணீரில் இட்டு வைக்கவே இங்கு வருகின்றன.

வஞ்சிர மீன்கள் செய்யும் இந்த செயல்கள் பற்றிய கேள்விகளுக்கெல்லாம் ஒரே ஒரு பதில்தான் உண்டு. எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே வஞ்சிர மீன்கள் தாங்கள் பிறந்து சிறிது காலமே வாழ்ந்த இடங்களை கண்டு பிடிக்கும் சிறந்த நினைவாற்றலையும், அதற்குத் தேவையான ஏனைய அமைப்புகளையும் வழங்கினான். ஏனைய படைப்புகளைப் போன்று வஞ்சிர மீன்களும் வல்ல அல்லாஹ் இட்ட கட்டளைப்படி - அல்லாஹ்வின் படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.

இந்த எடுத்துக்காட்டு, பரிணாம வளர்ச்சிக் கொள்கை முற்றிலும் தவறு என்பதை நிரூபிப்பதோடு, வஞ்சிரமீன்கள் தங்களது சந்ததியைப் பெருக்குவதற்காக தங்களது உயிரையும் பணயம் வைக்க தயங்குவதில்லை என்பதையும் நமக்குத் தெரிவிக்கிறது.

எல்லா உயிரினங்களும் தாங்கள் உயிர்வாழ்வதற்காக ஒன்றோடொன்று போராட்டம் நடத்துகிறது எனவும், பலம் கொண்ட உயிரினம் மட்டும் போராட்டத்தின் கடைசியில் வெற்றி பெற்று உயிர்வாழும் எனவும் 'பரிணாம வளர்ச்சிக் கொள்கை' க் காரர்கள் பறைசாற்றுகிறார்கள். ஆனால் பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்காரர்களின் பிடிவாதமான கொள்கைக்கு முற்றிலும் மாற்றமாக, இங்கு உயிரினங்கள் ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக இருப்பதை நாம் பார்க்கிறோம். விலங்கினங்கள் தங்கள் சந்ததிகளை உருவாக்குவதற்காக தங்களது உயிரையும் பணயம் வைப்பதை மேற்கண்ட ஆய்விலிருந்து நாம் தெரிந்து கொண்டோம். நாம் இதுவரை கண்ட ஆய்வுகளிலிருந்து, வேறு வேறு இனத்தைச் சார்ந்த வௌ;வேறு விலங்கினங்கள் ஒன்றுக்கு ஒன்று உறுதுணையாக இருப்பதை நாம் அறிந்து கொண்டோம். தன்னுடைய வாரிசுகளுக்காக தனது உயிரையும் பணயம் வைக்கும் வஞ்சிர மீனினம் - தன்னுயிர் போக்கத் துணியும் விலங்கினங்களில் ஒரே ஒரு உதாரணம்தான். இவ்வாறு ஆபத்துக்கள் பலவற்றைக் கடந்து தான் பிறந்து சில காலமே வாழ்ந்த இடங்களை அடையும் வஞ்சிர மீனினம், தனது வாரிசுகளை உருவாக்கும் முட்டைகளை இட்டதும், மரணமடைகின்றன. இருப்பினும் மரணத்திற்கு அஞ்சி அவைகள் தங்கள் பயணத்தை விட்டுவிடுவதில்லை. இவ்வாறு தனது வாரிசுகளுக்காக தன்னுயிர் கொடுக்கவும் தயாராக இருக்கும் விலங்கினங்களைப் பற்றி பரிணாம வளர்ச்சிக் கொள்கையால் எந்தவிதத்திலும் விளக்கமளிக்க முடியாது. இந்த உண்மை ஒன்றே அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு போதுமான அத்தாட்சியாகும்.

எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே வஞ்சிர மீன்கள் தாங்கள் பிறந்து சிறிது காலமே வாழ்ந்த இடங்களை கண்டு பிடிக்கும் சிறந்த நினைவாற்றலையும், அதற்குத் தேவையான மற்ற அமைப்புகளையும் வழங்கினான். ஏனைய படைப்புகளைப் போன்று வஞ்சிர மீன்களும் வல்ல அல்லாஹ் இட்ட கட்டளைப்படி - அவனது படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன. ஆறறிவு படைத்த மனிதர்கள், ஐந்தறிவு படைத்த இதுபோன்ற உயிரினங்களிலிருந்து பாடம் பெற வேண்டும். இது பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன் நெற்றி உரோமத்தை அவன் (அல்லாஹ்) பிடித்தவனாகவே இருக்கின்றான்..:' (அத்தியாயம் 11 ஸூரத்துல் ஹூது - 56வது வசனத்தின் ஒரு பகுதி).

மேலும் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

'இன்னும், உணவளிக்க அல்;லாஹ்; பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை, மேலும் அவை வாழும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.' (அத்தியாயம் 11 - ஸுரத்துல் ஹூது - வின் 6வது வசனம்)